×

இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளராக சாந்த கோட்டேகொடா நியமனம் : புதிய அமைப்பை உருவாக்க அரசு திட்டம்!

கொழும்பு : இலங்கையில் கடந்த 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றது. இதன் தொடர்ச்சியாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த பதற்றம் படிப்படியாக தணிந்து வருகிறது. இருப்பினும் நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகராக முன்னாள் காவல்துறை தலைவர் இளங்கோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இலங்கை பாதுகாப்புத்துறையின் புதிய செயலாளராக சாந்த கோட்டேகொடாவை அதிபர் சிறிசேன நியமித்துள்ளார். முன்னாள் ராணுவ தளபதி கோட்டேகொட, 2005ம் ஆண்டு இறுதி யுத்தம் தொடங்கிய போது தளபதியாக இருந்தவரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் புதிய சொலிசிட்டர் ஜெனரல், தலைமை கணக்காய்வாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமன உத்தரவை அதிபர் மைத்ரி சிறிசேன நேரடியாக வழங்கியுள்ளார்.

மேலும் புதிய புலனாய்வுத்துறை அமைப்பு ஒன்றை உருவாக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முப்படைகளின் புலனாய்வுத்துறை மற்றும் அரசின் புலனாய்வுத்துறை என்பதை தவிர்த்து இந்தியாவின் ரா அமைப்பை போன்று இந்த புலனாய்வு அமைப்பு அமையவுள்ளது. புதிய புலனாய்வு அமைப்பின் மூலம் நாட்டு நடப்பு பற்றிய தகவல்களை திரட்டி, எதிர்காலத்தில் அவற்றின் தாக்கம், தீர்வுகள் குறித்த கணிப்புக்களை அரசு பாதுகாப்புத்துறைக்கு கொடுக்கும் என இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shantha Kottekoda ,Sri Lanka ,Government , Sri Lanka Defense Department, Shantha Kottekoda, Sirisena
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்